வியாழன், 12 டிசம்பர், 2013

தொடர்ச்சி - 29 முதல் 35 வரை

29. அநாகலித சாத்ருச்ய சிபுக ஸ்ரீ விராஜிதா

அன்னை அழகுக்கு ஒப்புமை இல்லை
அன்னையின் முகவாய் அழகிதுவே        (அ)

ஆயிரம் நா கொண்ட சேஷனுக்கும்
பாயிரம் பாடிட முடியாது                            (அ)

அற்புதமான அழகி அவள்
பொற்பாதம் பணிந்தால் பிறவியறும்
கற்கண்டைப் போன்ற இனிப்பாகும்
பற்றினை துறப்பதே ஞானனந்தம்           (அ)

சங்கரர் பாடிய சக்தி அவள்
எங்கும் நிறைந்த ஈஸ்வரியாம்
அங்கும் இங்கும் அலையாமல்
பொங்கும் மனதே நினைத்திடுவாய்        (அ)

30. காமேச பத்த மாங்கல்ய சூத்ரசோபித கந்தரா

ராகம் - சங்கராபரணம்

மங்கல சூத்ரம் மஹிமையுடன் விளங்கும் என கூறும் சாஸ்த்ரம்
காமேசர் தன் கையால் அணிவித்த                           (ம)

சக்தியை மணந்த ப்ரம்மமே ஸத்யம் பர
பக்தியால் பாடிய வாக்தேவிகள் ஸத்பாத்ரம்         (ம)

மங்கலம் என்றால் சிவமாகும் உல
கெங்கும் சுடர்விடும் ப்ரகாசம்
ஸங்கத்தால் வருகின்ற ஞானாநந்தம்
தங்கிடும் விமர்சமே நல் சூத்ரம்                                 (ம)

காமத்தை கடந்த காமேசர் அவர்
ஸாமத்தில் பாடும் சதுர்வேதர்
வாமத்தை வவ்விய காமேசீ அவள்
தாமாக தோன்றும் உயர் சைதன்யம்                         (ம)

31. கனகாங்கத கேயூர கமனீய புஜாந்விதா

ராகம் -மோஹனம்

கேய+ரம் தன்னை அணிந்தாள் காமேசீ
இரட்டைவினை தன்னை இதமாய் போக்கிடவே     (கே)

பொன்னாலான பூஷணம் தரித்தாள் நம்
முன்னைவினை யெல்லாம் மரித்திடவே                  (கே)

ஞானாநந்த ஜொலிப்பு அதனுள்ளே சுழலும்
மனம் என்னும் மந்திர வளைவு உண்டு
அனைத்தும் என் கையில் அடக்கமென
வினைத்தொடர்பெல்லாம் விலக்கமென                    (கே)

ஸத்குருவென்ற கொல்லன் செய்தது அது
முத்துக்களான மனனம் பதித்தது
அத்துவித அறிவை அழகாய் தருவது அது
ஸத்தான சாஸ்த்திர ஸத்தியம் சொன்னது                 (கே)

32. ரத்னக்ரைவேய சிந்தாக லோல முக்தாபலான்விதா

ராகம் - சிந்துபைரவி

ரத்னக்ரைவேய பதக்கம் அன்னை தன் கழுத்தில்
நினைத்ததை எல்லாம் அருளும்                             (ர)

சாதாரணம் இல்லை சங்கடங்கள் இல்லை
ஆதாரமாய் விளங்கும் அறிவின் எல்லை            (ர)


ஞானாநந்தம் அதில் விளங்கும் ரத்னம்
தன்னை அறிய வைக்கும் திருவருள் தத்வம்
சின்ன கழுத்தது சிவஞான ப்ரதம்
சன்னமாய் ஒலிக்கும் ஸதாசிவ மந்த்ரம்            (ர)

வேதத்தின் உண்மை உணர்வதே சிறப்பு
நாதத்தின் ஒலியே நவரத்ன மாலை
பாதத்தை பணிந்தால் பிறகில்லை தொல்லை
ஆதரவாய் நிற்கும் அந்தகன் வருகையில்            (ர)


33. காமேச்வர ப்ரேமரத்ன மணிப்ரதிபனஸ்தனீ

காமேசருக்கு தந்தாளே தேவி தன்னுடலை
தாமாக அவரின் அன்புக்கு                                 (கா)

சிவமிங்கே அன்பின் மறுவடிவம் அதற்கு
தவமிங்கே புரிவதே குருவடிவம்                     (கா)
           
ஞானாநந்தம் நல் உடலாம் அது
தானாய் வராது தவம் வேண்டும்
வானாய் விரிவது சிவ ரூபம் அங்கு
மனதை செலுத்தினால் பரலோகம்                  (கா)

ஆசையை துறந்திட வேண்டுமடா மன
மாசை துடைத்திட (பரம்) தோன்றுமடா
சாவை துரத்திட வேண்டுமடா பயப்
பேயை போக்கிட பார்த்திடடா                       (கா)


34. நாப்யாலவால ரோமாளி லதாபல குசத்வயீ

ராகம் - செஞ்சுருட்டி

நாபியென்னும் கொடியில்
நாமரூப ஸ்தனங்கள்                      (நா)

அஸ்தி பாதி ப்ரிய ரோமம்
அன்னையின் உடல் ப்ரம்மம்                        (நா)

வானமெல்லாம் விரவியது வாக்தேவி சொன்னது
கானமிதில் உறைவது காலத்தை கடந்தது
ஞானாநந்த ரூபத்தில் ஞாலத்தில் இருப்பது
தன்னுள் உள்ளதுதான் தானாய் வாராது             (நா)

தத்துவத்தை அறிந்திடவே தரணியிலே வந்தோம்
அத்துவித ப்ரம்மத்தை அறிந்திடவே வந்தோம்
ஸாத்வீகமாய் இருந்தால் ஸத்தியத்தை அறிவோம்
ஆத்ம தத்துவமே அன்னையின் உடலாகும்          (நா)


35. லக்ஷ்யரோம லதாதார தாஸமுன்னேய மத்யமா

ராகம் தோடி

ஊஹித்து அறிவதைப்போல் உந்தன் இடை
உள்ளதம்மா உத்தமியே                             (ஊ)

குருசொல்லால் ஊஹித்து ப்ரம்மத்தை அறிவதைப்போல்     
உந்தன் இடை உள்ளதம்மா                          (ஊ)

தன்னை அறிவது தரணியிலே கடினமாம்
அன்னை அருள்இருந்தால் அதுவும் எளிதாகும்
பின்னை பிறப்பறுக்க பராசக்தி வந்திட்டாள்
இன்னமும் ஏன்மனமே உந்தனுக்கு சஞ்சலம்?                   (ஊ)

ஞானாநந்தம் நம்முள் நாளும் உள்ளதுவாம்
காணாமல் போனது நம்முடை அஞ்ஞானம்
தூணாக இருப்பதுதான் குருவின் திருவருளாம்
பூண்கட்டி வைப்பதுபோல் காயத்தை காக்காதே     (ஊ)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக