செவ்வாய், 17 டிசம்பர், 2013

தொடர்ச்சி 36 முதல் 40 வரை

36. ஸ்தனபார தளன்மத்ய பட்டபந்த வளித்ரயா

ராகம் - ஸஹானா

அழகிய வடிவம் அன்னையின் உருவம்
உத்தம ஸ்த்ரீயின் உன்னத வடிவம்                 (அ)

வலித்ரய அங்கம் வாதனை நீக்கும்
புலியாம் காமம் பாங்காய் போக்கும்                 (அ)

மனமே அன்னையின் உருவில் லயிப்பாய்
தினமும் பாடி தீமையை அழிப்பாய்
ஞானத்தில் மகிழ்வே உந்தன் லட்சியம்
கானத்தில் வருவாள் கடமையை செய்தால்          (அ)
           
பத்தும் ஐந்தும் பரத்தினை காட்டும் (அன்னையின் மந்திர அட்சரங்கள்-15)
ஸத்தின் ஸங்கம் சாஸ்த்ரம் கூட்டும்
சுத்தும் ப்ரபஞ்ச சூக்குமம் புரியும்
சித்தாம் வாலை அதனின் தொடக்கம்               (அ)37. அருணாருண கௌஸ்தும்ப வஸ்த்ரபாஸ்வத் கடீதடீ

ராகம் - முகாரி

சிவப்பு ஆடை தரித்த சிவகாம சுந்தரி
சீக்கிரம் வந்தென்னை ஆதரி                        (சி)

ஞானாநந்தன் எனக்கு உயிர் நீ
வானைப்போன்று ஒளிரும் தருணீ                   (சி)
           
வாக்தேவி போற்றிய பராசக்தி
போக்கிடம் வேறில்லை நீயே கதி
ஆக்கி காத்து அழிக்கும் அரசி
ஏக்கம் நீக்கி ஏற்றம் புரி                    (சி)

புரமெரித்தோன் துணைவி பங்கஐ லோசனி
திரிபுர சுந்தரி துன்பம் தீர்க்கும் தலைவி
அரிஸோதரி அன்னபூரணி அம்பா
துரிதமாய் எனக்கு துணைவருவாய் அம்மா          (சி)


38. ரத்ன கிங்கிணிகாரம்ய ரசனா தாம பூஷிதா

ராகம் -  ஆனந்தபைரவி

ரத்ன கிங்கிணி இடை அணிதான்
உத்தமமான உந்தனுக்கு அம்மா           (ர)

வாலையின் உருவில் உள்ளவள் நீ
நாலாம் வேதத்தின் நற்பொருள் நீ                   (ர)

அருளைத்தருகின்ற ஆண்டவளே
இருளை நீக்கும் இன்னொளியே           
வருவது வரட்டும் என நானும்
பொறுமையாய் இருப்பேன் நின்னருளால்            (ர)
           
ஞானானந்த பொன் அணியை அரை
ஞாணாய் தரித்த நாயகியே
தேனாய் இனிக்கும் உன் நாமம் தேவ
சேனாபதியை பெற்றவளே                           (ர)


39. காமேசஞ்ஜாத ஸெளபாக்ய மார்த்வோரு த்வயான்விதா

காமேச்வரரே அறிவார் காமேச்வரியின் தத்வம்
ஸ்ரீநகரத்தில் விளங்கும்                              (கா)

வாக்தேவிகள் உரைப்பார் விதவித நாமங்கள்
வேதமுதல்வர் அறிவார் அதனின் தத்வங்கள்        (கா)

ஞானாநந்தம் அவளின் ரூபம் உயர்
வானம் போல விளங்கம் அவள் உருவம்
சிவனாய் இருந்து சிவனை பூசிப்பார்
தவத்தினை செய்யும் தூய முனிவர்கள்              (கா)

தாயவள் தத்வம் தீர்க்கம் மிக ஆனது
ஆய்ந்தறிய ஒண்ணா ஆழமிக்கது
வாயாலே அவள் நாமம் உரைத்தால்      
சேயென நமக்கு சீக்கிரம் அருள்வாள்                (கா)


40. மாணிக்க முகுடாகார ஜானுத்வய விராஜிதா

ராகம் பைரவி

மங்களம் அருள்வாய் ஸ்ரீமஹாத்ரிபுர ஸ_ந்தரி
மாணிக்ய முகுடம்போன்ற முழங்கால் உள்ளவள்    (ம)

அழகின் பெட்டகம் அன்னையின் உருவம்
தழலின் வடிவம் தத்துவம் அருளும்                 (ம)

அவளின் அழகில் மனமே லயிப்பாய்
தவத்தினை செய்து தூய்மை அடைவாய்
சிவத்தின் உருவமாய் சீராய் பூஜித்தால்
பவத்தினை போக்கி ஞானாநந்தம் அருள்வாள்       (ம)


அன்பே அவளுக்கு பிடித்த மந்த்ரம்
இன்முகம் அவளுக்கு ஏற்ற தந்த்ரம்
தண்மையே அவளின் தூயதாம் பீடம்
கண்ணாடி கண்டு கடவுளை அறியும்                 (ம)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக